29/7/11

மனநோய்களுடன் சுற்றிதிரிகிற கடவுள்

பிணைக்கப்பட்ட சங்கிலிகள் 
நீ சிரிக்கையில் குலுங்குகின்றன 

உன் கூவலில் வந்திறங்கிய பட்டாளம் 
மனவெளியை சிதைக்கின்றன

யாருமற்ற ராத்திரிகளில்
உன் அலறல்களின் பாடல்
தொலைத்த திறவுகோல்கள்
மந்திரவாதிகளின் புகைகூட்டில் நடனமிடுகின்றன

உன் தனிமையின் சொப்பனங்கள் 
தருவித்த கடிதவரிகளில்
மலை நகருகிறது

நகரும் மலையால் உன் வீடு 
கடலுள் தள்ளப்படுகிறது

நீ சுற்றிதிரிந்த
பிரேதேசங்களின் கடவுள்
அலைகளின் கடவுளோடு புணர்கையில்
தாளம்பூக்களின்
வியாபகத்தில் விடிகிறது உனக்கான காலை

மனவெளியின் காட்சியில் திகைத்தபடி
நீ விட்டெறிந்த வார்த்தைகள் எழுதுகின்றன
உனக்கான மனநோய்களை

சொப்பனகூட்டில் என்னை கனிந்த போது
துவக்குகளால் பிளந்த
கதவுகள் வழி நுழைகின்றன
உன் வளர்ப்பு மாடுகளின் பிளிறல்கள்

கருப்பட்டிச்சில்லுகளால்
எறிந்து விரட்டும்  காலத்தின் கதவுகள்
சாத்திக்கொள்கின்றன
உனக்கும் எனக்குமான பெருவெளியில்

மனக்கொப்புளங்களில்
நான் தீட்டிய அருவாள்கள்

புரண்டெழும் பனையின் சீற்றங்களில்
வெருள்கின்றன
பிதாக்களின் களிக்கூட்டங்கள்

சங்கிலிகள் வரைந்த உன் நடை தூரங்களில்
நீ தடுமாறி முத்தமிட்ட தரையெங்கும்
உதிரம் எழுதமறுத்த கனவுகள்

நீந்தியலையும் என் பயணங்களில்
கடலில் தள்ளப்பட்ட வீடு
சுறாக்களின் களிப்புடன் எதிர்கொள்கிறது

ஸ்காரியோத்தின் கடைசிபுத்திரனைப்போல
என்னையும்
சிலுவையில் அறைய துடிக்கிறது
உன் பிறழ்வெளி

பனையின் கொண்டையிலிருந்து
நீ குதிக்கையில்
அறுத்தெறிந்த பாம்படத்தின் சிரிப்பொலிகள்
ஞாபக வடுக்களின்
நடனங்களை ஒழுங்கமைக்கின்றன

இரவு விருந்தின் கடைசியில்
நீ விட்டெறிகிறாய்
வெறுமையின் கடவுளை

காவுகளில் படைத்த படையலை
புறக்கணித்தபடி வெளியேறுகிறாள்
சுவைமொட்டுகள்  கருகிய காளி

சங்கிலியையேனும் வைத்திரு
எனக்கான காலங்களுக்காக

Read more »

என் மலைசரிவு தோட்டம்


என் வேட்டை சாகசங்களில்
வீழ்ந்த பன்றிகளை
மேய்க்கத் துவங்குகிறாள் என் மகள்

உறக்கத்திற்கான கதைகளில்
கோதையாற்று மலைச்சரிவில்
பரந்து விரியும் என் தோட்டம் வந்தமருகிறது

தோட்டசரிவின் உயிர்ப்பை மீட்டும்
என் தாலாட்டுகளில்
கண்ணயர்கிறது என் மனைவிக்கு

வாழைகளை முறிக்கும் யானைகளை
விரட்டியதை
பாலையெங்கும் ஓடிக்காண்பிக்கிறேன்

மிளாக்கள் அலறும் இரவை
பாலைவனக்காற்றில் வரைகிறேன்

நான் கண்டிராத
தோட்டத்தின் காட்சிகள்
பாலை கூடாரத்தை நிறைக்க துவங்குகிறது

என் கடிதங்களில்
முளைத்த தோட்டத்து புற்கள்
எனக்கு தருவித்த கதைகளில்
மலையிறங்கும் காணிகள்
பிடுங்கிய கிழங்குகள்
வாற்றுச்சாராயத்தில் மிதக்கின்றன

கிராம்பு இலை சருகுகளை
சேகரித்து திரும்பும்
என் அம்மாவின் புன்னகையில்
அக்கானி கலயங்கள் சிதறின

சிரட்டைகள் ஏந்தும் மரங்கள்
பரிகசித்தன என்னை

பனைகள் புணர்ந்த
காளிகளின் நடனத்தில்
தம்புரான்கள் உருவிய மாராப்புகளில்
விசிறிய பிரம்பில்
பனம்பட்டை கள்ளில்
கரையத்துவங்குகிறது என் பிம்பம்

அவள் கண்கள் வழியே
என்னுள் இறங்குகிறது
எனக்கே எனக்கான தோட்டம்

உறக்கமற்ற இரவுகளில்
விழித்தெழும் தோட்டத்தின்
சுக்குநாறி புற்களில்
நான் பின்னிய தொட்டில்
ஆடிக்கொண்டிருக்கிறது இரவெங்கும்

Read more »

பார்வையில் அடைந்த கர்ப்பம்


தவிர்க்க இயலாத
நடைபாதையை நிறைத்தபடி
நிகழ்காலத்தின் அழகுபதுமை
என் எதிரே

நவீன உடையினுள்
துள்ளிக்குதிக்கிறது
எனக்கான வாழ்க்கை

சந்தோஷத்தின் ஹைஹீல்கள்
பின்னுகின்றன
என் பார்வையின் உக்கிரத்தில்

உடையை சரிசெய்ய முயலும்
அழகில் கலைகிறது
எனக்கான பெருமூச்சுகள்

வேட்டை தந்திரங்களின்
பார்வையில் விரியும்
கண்ணிகளை
லாவகமாக கடக்கின்றன
உன் முயல்கள்

உன் உடல்மொழியின் நடனம்
பார்வையில் கைகோர்க்கிறது

ஏவாளின் வெட்கங்களை
தொலைத்த உன் முகத்தில்
துளிர்த்த பனிபூக்களில்
தப்பிக்கும் மிருகங்களின் தந்திரங்கள்

கடந்துபோகையில்
நீ அடையும் கர்ப்பம்
எனக்கான சொப்பனத்தின்
திறவுகோலை திருடிக்கொள்கிறது

யாருமற்ற நடைபாதையில்
நீ திருப்பிக்கொள்ளும் பிருஷ்டங்கள்
மீறுகின்றன எழுதப்பட்ட நளினங்களை

இரவுக்கான உணவை பகிர்கையில்
நீ அணியமறுத்த உடைகளில்
தேங்கிநிற்கிற கர்ப்பம்
புணர்ச்சிக்கான ஏக்கத்தில் கலைகிறது

உடல்பாகங்கள் உறைந்த வார்த்தைகளை
வாசிக்கையிலெல்லாம்
உன்னை புணர்கின்ற விழிகளில்
சாத்திக்கொள்கின்றன
உடல் பலஹீனத்தின் கதவுகள்

கர்ப்பம் யாருமறியாமல்
மலர்ந்து கொண்டிருக்கிறது

Read more »

வாதிகில்தியில் தவறவிட்ட காமசிலுவைகள்


யாசகத்தின் கடைசியில்
ஊர்ந்து மேலேறின
என் காமசிலுவைகள்

துரோக நாடகத்தின்
திரைசீலை விலகியது

முலைக்காம்புகளால்
என் நெஞ்சத்துரோமத்தில்
நீ வரைந்த காதல் ஓவியத்திலிருந்து
நிழலும் நிர்வாணமும் வெளியேறின.

ரெபோக்காள் தோட்டத்து மலர்களைப் போல
நீ பூத்திருந்த காலையில்
வெறுங்கையுடன் என்னை வெளியேற்றினாய் 

வாதிகில்தியின் நீர்வற்றிய படுக்கைகளில்
போக்கிடமற்ற என் பயணம்

உன் கவண்கல்
என் காலடியில் சிரித்தது
கோலியாத்தின் அலறல்
தேய்பிறையாகிக்கொண்டிருந்தது

சவஊர்வலத்து பாடல்வரிகளில்
நீ உதிர்த்த வார்த்தைகளின் நடனம்

உன் கண்களில் தேங்கிய
ஜென்மப்பகையின் காதல்

அங்க அசைவுகளில்
சங்கேதபாஷைகளின் கொக்கிகள்

உறங்கிவிட்ட கனவை
மறுபடியும் தாலாட்டுகிறாய்

பாரோனின் இரவுக்காவலர்கள்
நம் காதலை நமக்கு பாடுகிறார்கள்

உன் கூந்தலில் புரண்டெழ
என் விரல்கள் காதல் கொள்கின்றன


கோலியாத்தின் வெட்டப்பட்ட நாவில்
மறைந்தன ரத்தசுவடுகள்

காலம் நிறம் மாற்றிக்கொண்டிருந்தது.
காதல்
பெருவெள்ளத்தைப்போல பின்தொடர்கிறது

முஷ்டிமைதுனத்தின் கடைசியில்
நீ வெளியேறினாய்
விடைபெறாமலே நானும்.

Read more »

விமான பணிப்பெண்களின் பிருஷ்டங்கள்


அதிராத உன் பிருஷ்டங்களை
கண்கள் தேடுகின்றன
என் பயணங்களில்

விமானத்தின் பின் இருக்கைவரை
நீளுகிற என் தேடல்களில்
உபசரிப்புகள் தித்திக்கிறது

அறியாத தொடுகைகளை
அங்கீகரிக்கின்றன
உன் பிருஷ்டங்கள்

என் தந்திரங்களை அவிழ்கின்றன
உன் பிருஷ்டங்களின் தந்திரங்கள்

தடுமாறும் விமானத்தில்
என் இருக்கையை
கடந்துபோக முயற்சிக்கையில்
என் சுவாசங்கள் தழுவிய
உன் பிருஷ்டங்களில்
நேற்றைய ஓவியத்தின் இலக்கணங்கள்

ஒவ்வொரு விமானத்திலும்
நீ பிருஷ்டங்களை அலங்கரித்தபடி
என்னை வரவேற்கவும் விடைதரவும்
காத்திருக்கையில்
எழுதப்பட்டிராத விதிகளில் வந்தமர
விமானத்தின் அறியப்படாத இருக்கையொன்று
கண்சிமிட்டுகிறது

தனிமையில்
நீ கழற்றி வைத்த பிருஷ்டங்களில்
நேற்று சொறிந்த வடுக்கள்

Read more »

நடனப்பெண்களின் படுக்கையறைகள்


மதுக்கூடத்தின் இருட்டுமூலையில்
நடுங்கும் மரக்கால்களுடன் 
எனக்கான இருக்கை

பரிமாறப்பட்ட மதுவில் மிதக்கிறது
உன் ஹிருதயத்தின்
உடைந்த குளிர் துண்டு

பிழையான பாடலுடன் உன் நடனம் 

வண்ண ஒளிகள் வாரியிறைக்கின்றன
உன் மேனியில் பூசிய மெழுகுகரைசலை

நட்சத்திரங்களால்
மறைக்கப்பட்ட உன் முகத்தில்
நேற்றைய பகல் உறக்கத்தின் அலங்கோலங்கள்

நிதானமற்ற உன் நடனத்தில்
நீ கழற்றியெறிந்த
உள்ளாடைகளை கௌவிக்கொள்ள
நான் இருக்கைகள் மாற்றிக்கொண்டிருக்கிறேன்

உன் நிர்வாணத்தில்
புரளும் பார்வைகளின் வெளிச்சசிதறல்களில்
பறக்கின்றன நாணயங்கள்

சில்லறைகள் எழுப்பும் இரைச்சல் இசையை
புறக்கணித்தபடி
நடனத்தின் ஆவேசத்தில்
சவரக்கத்திகள்
உன் உணர்வுகளை வழித்தெடுக்கின்றன

உன் புன்னகைகள்
ஆடையற்ற மேனியின் பந்தயப்பணத்தை
அதிகரிக்கின்றன

பந்தய வெற்றிகளை
உன் படுக்கையறை குவளைகள்
கொண்டாடுகின்றன

நேற்றைய கசங்கலை நீவுகிறாய்.

வண்ணச்சீலைகளால்
காற்றுப்பொந்துகளை மூடுகிறாய்

நறுமணப்பத்திகளை கொளுத்துகிறாய்

குவளையில் மிஞ்சும்
கடைசிசொட்டையும் உறிஞ்சுகிறாய்

நேற்றைய பெயர்களை மறுதலிக்கிறாய்

இன்றைய பெயரின் மன எரிச்சலை
புகைபோக்கியில் கசியவிடுகிறாய்

வெளியேறும் வழியற்ற
உன் படுக்கையறை

குளிர்சுனைகளில்
வெப்பத்தை தருவிக்கிறாய்

உன்னை போலவேயிருந்த நிலவை
எனக்கு ஊட்டுகிறாய் 

வண்ணங்களை மூடியிருந்த நம்பிக்கைகளை
என் சட்டைபையில் நிரப்புகிறாய்

தேடுவதற்கான எதுவுமற்ற உன்னிடம்
தேட துவங்குகிறேன்

முத்தமிடுகையில்
நீ கண்ணாடி பிம்பமாகவே இருக்கிறாய்

நீ கதகதப்பான பெட்டகம்

தளர்வதற்காக
உருவாக்கப்பட்ட விளையாட்டுகளை
விளையாட துவங்குகிறோம்

என் காதல் மொழிகளை சேகரிக்கும்
காணிக்கைபெட்டி நிரம்பிவழிகிறது

நீ ருசியான கனியாக இருந்த
நடன அரங்கை படுக்கையறைக்குள்
நுழைக்க முயற்சிக்கிறாய்

கனவில் மூழ்கும் என் கடன்அட்டைகள்
உன் வெப்பத்தில் உருகுகின்றன

தளர்ந்த என்னை வீசியெறிகிறது
உன் படுக்கையறை

உடுக்க நேரமற்ற உன்னிடம்
என் பெயரை நினைவில் பதிய
பிரார்த்திக்கிறேன்

நாளைய நடனத்திற்காக
நீ உள்ளாடைகளை
தயாரிக்க துவங்குகிறாய்

மதுக்கூட பெருமூச்சுகள் காத்திருக்கின்றன
நாளைய கதகதப்பிற்காக

உள்ளாடைகளின் ஓவியங்கள்
உன் நினைவை
தருவதேயில்லை ஒருபோதும்.

Read more »